கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபீனிடம், 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர். 6 பேரிடம் போலீசார் 2வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் கைதான முகமது தல்கா உட்பட 5 பேரின் வீடுகளில் போலீசார் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே, கார் சிலிண்டர் வெடிவிபத்து சம்பவத்தின் எதிரொலியாக கோவை கோட்டைமேடு, உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் ஆவணங்களின்றி கேட்பாராற்று கிடந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் அகற்றினர். அதுமட்டுமல்லாமல் அந்த வழியாக வரும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தி வாகன உரிமையாளரிடம் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே அனுப்பி வைத்தனர்.







