’கர்ப்பிணியா? அப்போ வேலைக்கு தகுதி இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய எஸ்பிஐ

பாலின சமத்துவத்திற்கு எதிரான வகையில் தனது வழிகாட்டு நெறிமுறைகளை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் சுற்றறிக்கையில், பெண்களின் பணி நியமனத்திற்கான வழிகாட்டுதலைத் திருத்தி வெளியிட்டது. அதில், 3…

பாலின சமத்துவத்திற்கு எதிரான வகையில் தனது வழிகாட்டு நெறிமுறைகளை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் சுற்றறிக்கையில், பெண்களின் பணி நியமனத்திற்கான வழிகாட்டுதலைத் திருத்தி வெளியிட்டது. அதில், 3 மாதங்கள் அல்லது அதற்கு மேலான கர்ப்பிணிகள் பணி சேர்க்கைக்கு தற்காலிகமாக்கத் தகுதியில் இல்லை எனவும், அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்படக் கூடாது எனவும் பாரத ஸ்டேட் வங்கி தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. மேலும், அந்த கர்ப்பிணிகள் குழந்தை பிறந்து நாங்கு மாதங்கள் கழித்து தான் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு முன், 6 மாத கர்ப்பிணிகள் தாங்கள் பணிக்கு வருவதால் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்ற மருத்துவ சான்றிதழோடு பணிக்கு வரலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் தர மறுப்பு

இந்நிலையில் எஸ்பிஐ-ன் இந்த புதிய நெறிமுறைகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், எஸ்பிஐயின் இந்த செயலானது பாரபட்சமானது எனவும் இந்த உத்தரவு மகப்பேறு சலுகைகளைப் பாதிக்கும் எனவும் அதில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த உத்தரவை பிறப்பித்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் வலியுறுத்தியிருந்தது.

மேலும், அமமுக பொதுச்செயலாளர் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, ”தாயைப் புனிதமாக வணங்கும் நம் நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இப்படி அறிவித்திருப்பது தாய்மையை இழிவுபடுத்தும் செயல். எனவே, பெண்ணுரிமையை மதித்து இந்த உத்தரவை SBI திரும்பப் பெற வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது எஸ்பிஐ-ன் இந்த உத்தரவு பாலின சமத்துவத்திற்கு எதிராக இருப்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இப்படி பல எதிர்ப்புகள் எழுந்த பின்பும், எஸ்பிஐ இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.