கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னை முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலவிசாரித்தது குறித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சிப்பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவரமாக பரவி வரும் சூழலில் அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கர் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தது குறித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் முகநூல் பதிவில் குறிப்பிட்டதாவது, பொங்கல் திருவிழா விடுமுறை முடிந்த திங்கட்கிழமை. காலையில் லேசாக துவங்கிய காய்ச்சல் இரவு உச்சத்தை தொட ஆரம்பித்தது. செவ்வாய்கிழமை காலை காய்ச்சலுடன் தொண்டை வலி துடிக்க வைத்து விட்டது. கொரோனாவாக தான் இருக்கும் என முடிவெடுத்து அரசு மருத்துவமனைக்கு சொல்லி சோதனை செய்து கொண்டேன். இரவு “பாசிட்டிவ்” என முடிவு வந்து விட்டது. மருத்துவர் தனிமைப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கினார்.
தனிமை காலத்தில், பணியாற்ற இயலாததை முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும்.
முதல்வரின் தனி உதவியாளருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினேன், முதல்வரிடம் தகவல் சொல்லிவிடுவதாக பதில் அனுப்பினார். முகநூலில் உடனிருந்தோர் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தகவலை பதிவுசெய்துவிட்டு, மருந்துகளுடன் தனிமைப்படுத்தி கொண்டேன். எச்சில் கூட விழுங்க முடியாத அளவுக்கு தொண்டை வலி படுத்தி எடுத்தது.
காலை வெளியில் செல்ல முடியாத நிலையில், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். முதல்வர் காணொலி மூலமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அலைபேசி ஒலித்தது. முதல்வரின் தனி உதவியாளரிடமிருந்துதான் அழைப்பு. ‘திக்’ என்றிருந்தது. “இரண்டாவது தடவை கொரோனா வர்ற மாதிரி அலட்சியமா இருப்பதா?”, என்று கோபப்படுவாரோ என்ற பயந்தேன்.
” அண்ண, முதல்வர் பேசறாங்க”, அலைபேசி கைமாறியது. நான் பேசுவதற்குள், “என்ன சங்கர்”, என்ற அன்பான, அரவணைப்பான குரல். ” வணக்கங்க அண்ணா”, என்று எழுந்து நின்றேன். “உடம்பு எப்படி இருக்கு?”. ” தொண்டை வலி தாங்கண்ணா கடுமையா இருக்கு. சுரம் குறைஞ்சிருக்கு”. “போன் அதிகம் பேசாதீங்க. செல்ல ஆப் பண்ணிட்டு ரெஸ்ட் எடுங்க” என்றார். உடனே நானும் சரிங்கண்ண என்றேன். தலைவர் பேசறீங்கன்னுதான் போன் எடுத்தேன்”, என்றேன். ” ஜாக்கிரதை சங்கர். ஓய்வெடுங்க”, என்று முதல்வர் அன்பாக விடைபெற்றார். உடல் லேசானது போல் ஓர் உணர்வு, புத்துணர்வு பெற்றேன். என் தந்தையார் இருந்திருந்தால் காட்டக்கூடிய அதே கனிவு.
முதல் முறை கொரோனா தாக்கிய போதும், அழைத்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறியவர்தான் தலைவர் தளபதி அவர்கள். இது ஏதோ தன் அமைச்சரவையில் பணியாற்றும் ஒருவருக்கான அன்பு மாத்திரம் அல்ல. யார் பாதிக்கப்பட்டாலும் அதே அன்புதான், அரவணைப்புதான், அக்கறைதான்.
நாமக்கல்லை சேர்ந்த பதிமூன்று வயது சிறுவன் வர்ஷாந்த். விபத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்கிறான். மூளையில் ரத்தக்கசிவு. செலவு செய்ய இயலாத ஏழைக் குடும்பம். முதல்வரின் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் எந்த செலவுமில்லாமல் அறுவை சிகிச்சை நடந்தது. சிறுவன் வர்ஷாந்த் நலம் பெற்றான்.
சிறுவனின் வீட்டுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்.பி.யின் அலைபேசி மூலம் முதல்வர் சிறுவனின் குடும்பத்தினரிடம் பேசினார்.
அப்போது, சிறுவனிடம் முதல்வர் பேசும்போது, ‘‘நல்லா இருக்கியா தம்பி’’ என கேட்டு நலம் விசாரித்தார். அதற்கு அந்த சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவித்தான். உடனே, முதல்வர் “வலி இருக்கிறதா? தைரியமா இரு, எப்படி விபத்து நடந்தது? மருந்து -மாத்திரை எல்லாம் கொடுத்தார்களா” என கேட்டறிந்தார். அதற்கு சிறுவன்,”மருந்து -மாத்திரை எல்லாம் கொடுத்தார்கள்”, என்றான்.
பின்னர் முதல்வர், எதுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமாரிடம் சொல்லவும் என கூறினார். இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயிடமும் முதல்வர் பேசினார். அப்போது முதல்வர், ‘‘அம்மா வணக்கம்மா, ஸ்டாலின் பேசுகிறேன்’’ என்றார். முதல்வரின் குரலை கேட்டதும் நெகிழ்ச்சி அடைந்த தாய், “நன்றி சார்” என கூறினார். “பையனை ஜாக்கிரதையா பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் மாவட்டசெயலாளரிடம் சொல்லுங்கள், அவர் பார்த்துக் கொள்வார்” என முதல்வர் கூறினார். முகம் தெரியாத சிறுவனிடமும் அதே அன்பு, அக்கறை, அரவணைப்பு.
இன்று 28.01.2022 நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் அலைபேசியில் அழைத்தார். சமீபத்தில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்க சென்ற போது, மதத்தை காரணமாக வைத்து புரோகிதரால் தடுக்கப்பட்டாரே அதே ஜாகிர் தான். இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் அவர்களால் 17 மாவட்ட இசைக்கல்லூரிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். ஜாகிர் அவர்கள் பட்ட அவமான காயத்திற்கு மயிலிறகால் மருந்து தடவியுள்ளார் முதல்வர். தலைவரிடம் ஜாகிர் வாழ்த்து பெற்ற புகைப்படத்தை முகநூலில் பார்த்து, வாழ்த்து தெரிவித்திருந்தேன். அந்த ஜாகிர் தான் அழைத்தார்.
“ஜாகிர் வாழ்த்துகள்”, என்றேன். ” நன்றிண்ணா”, என்றார். “தலைவர் என்ன சொன்னாங்க?”, என்று கேட்டேன். ஜாகிருக்கு ஒரு நிமிடம் வார்த்தை வரவில்லை.
” உள்ள நுழைஞ்சதும் ‘வாங்க ஜாகீர்’ என்றார். அருகில் போன உடன் ‘பிரச்சினை என்னாச்சி’ என்று கேட்டார் முதல்வர். ‘கேஸ் கொடுத்திருக்கேன்’ என்றேன். ‘கவலைப்படாதீங்க. நாங்க இருக்கிறோம். பணியை பாருங்கள், வாழ்த்துகள்’ என்றார் முதல்வர். அம்மையும் அப்பனுமாய் என் கண் முன்னால் தெரிந்தார் முதல்வர்”, என்று சொல்லும் போதே ஜாகிர் குரல் உடைந்து விட்டது. என் கண்களில் நீர். “ஜாகிர் கேட்கற எனக்கே கண்களில் நீர். உங்கள் நிலை புரிகிறது”, என்றேன்.
ஸ்ரீரங்கத்தில் அவமானப்பட்ட போது, தனக்கு யாருமே துணை இல்லையோ என்ற மனநிலையில் இருந்திருப்பார் ஜாகிர். இன்று தமிழகமே தனக்கு துணையாக இருக்கிறது என்ற மனநிறைவோடு அவர் பேசுவதை உணர்ந்தேன்.
அம்மையும் அப்பனுமாய் நம் முதல்வர் ” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.








