பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் SBI க்ளெர்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. அதற்கான முடிவுகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், அப்பணிக்கான முதன்மைத் தேர்வு வரும் ஜனவரி 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அங்குள்ள தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
https://twitter.com/ThamizhachiTh/status/1611568908577959936?t=06tlq2SGHc9EfY4hgcKejQ&s=08
அந்த கடிதத்தில், தமிழ் சமூகம் கொண்டாடும் அறுவடைத் திருநாள் பொங்கல் என்றும், இதனை பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம் என்று தமிழர்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 15ம் தேதி எஸ்பிஐ வங்கி தேர்வு நடைபெறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வர்கள் திணறி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.







