விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை ‘கைவிலங்கு’ மாட்டி கட்டிப்போடுங்கள் என இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி சக பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக பாதிகப்பட்ட பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவுகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விமானத்தில் கட்டுப்பாட்டை மீறி, ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு கைவிலங்கு மாட்டுங்கள் என்று விமான ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில், ஒழுங்கீனமாக செயல்படும் பயணிகளை கைவிலங்கு மாட்டி கட்டிப்போடவும், இதற்காக கைவிலங்கு, பெல்ட் உள்ளிட்டவற்றை விமானத்திற்குள் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் அவர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








