எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்; அதிரடியாக கைது செய்த போலீஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.  அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர். 

அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில்
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கடந்த ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தபணி வழங்கிய வகையில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

இதில், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், சூலூர் கந்தசாமி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகிய ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.