20 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இன்றுவரை தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த். அவரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டும். ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பாபா படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் படத்தையும் ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். பாஷா, வீரா, அண்ணாமலை உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் பாபா படத்தையும் இயக்கியிருந்தார்.
முழுவதுமாக டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டு பாபா திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதே போல படத்தில் இடம் பெற்ற 7 மந்திரங்களில் 5 மந்திரங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ள பாபா படத்தில் இடம் பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரை அவருக்கு நெருக்கமாக இருக்கும் படங்களில் பாபா படமும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் அவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் பாபா மீது கொண்ட பற்றும் தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.







