சிறிய படங்களில் இருந்துதான் சூப்பர் ஸ்டார்கள் பிறக்கிறார்கள் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சிஇஓ ரங்கநாதன், இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “சின்ன படங்கள் திரைத்துறைக்கு ரொம்ப முக்கியம். சின்ன படங்களில் இருந்துதான் சூப்பர் ஸ்டார்கள் பிறக்கிறார்கள். நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் எப்போதும் துணையாக இருக்கிறார்கள். அதற்கு நன்றி. இப்படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இப்படத்தின் 50வது நாள் வெற்றி விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், “ஒரு புதுமுகம் நடிக்கும் இப்படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கொண்டு வரமுடியும் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தேன். அதற்கு காரணம் என்மீது உள்ள நம்பிக்கையும், உங்கள் மேல் உள்ள நம்பிக்கையும் தான். ட்ரெய்லர் வந்ததும் இப்படம் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நம்பினீர்கள். அப்போது இருந்து இப்படம் பெரிய படமாக மாறிவிட்டது. இது இந்த வருடத்தின் டாப் 10 வெற்றி படங்களுக்குள் வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.









