சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வினீத் சரண், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். ஏற்கனவே ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எந்த உத்தரவையும் தற்பொழுது பிறப்பிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.







