முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது

பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து, உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துவோர் ஆகியோர் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் தங்கள் துறைசார்ந்த தொழில் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித் திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காக, விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கருணாநிதி எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள நினைவு மண்டபத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், அண்ணா பல்கலைக் கழகத்தில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கும், நாவலர் நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலும் சிலை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மு.வரதராசனாருக்கு ராணிப்பேட்டையிலும், முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையிலும் சிலை அமைக்கப்படும் எனவும், பரம்பிகுளம் ஆழியாறு திட்டம் உருவாக காரணமாக இருந்த பழனிசாமிக்கு ஆழியாறில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கு கிண்டிகாந்தி மண்டப வளாகத்தில் உருவச் சிலை அமைக்கப்படும் எனவும், பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படும் எனவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மனைவியை கொலை செய்ய முயன்றவர் கைது

Jeba Arul Robinson

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

Jayapriya

கோயம்பேடு சில்லறை வியாபாரிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிக வாபஸ்!

Halley karthi