அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் பெரிதாகி வருகிறது. இதனால் அவர்கள் வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என கருதும் சசிகலா இதனை பயன்படுத்தி திமுகவிற்கு எதிரான சக்தி வாய்ந்த தலைவர் நாம்தான் என்பதை நிரூபிப்போம் என அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா ஆதரவாளர்கள் கூறியதாவது, சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சசிகலா. இந்த சந்திப்பு என்பது எதர்ச்சையாக நடைபெற்றது அல்ல எனவும், இது திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பாகும் என அவர்கள் கூறுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அதிமுக தொடர்பான உட்கட்சி பிரச்சனைகளை மட்டும் தன்னிடம் கேட்க வேண்டாம். கரன்ட் பொலிடிக்கல் சப்ஜக்ட் பற்றியும் என்னிடம் கேளுங்கள்.அதற்கு பதில் கூற தயாராகவுள்ளேன் என சசிகலா அவருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் கூறி விட்டாராம். ஏன் இந்த திடீர் முடிவு என விசாரித்தபோது, அதிமுக வலுவான எதிர்கட்சி போல் நடந்து கொள்வதில்லை. இதனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சைலன்டாக ஸ்கோர் செய்து வருகிறார். இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதால் இந்த முடிவை சசிகலா எடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் காலுன்ற வேண்டுமென்றால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணி அரசியல்தான் சரிப்பட்டு வரும் என சசிகலா நினைக்கிறாராம். அதிமுகவினரும், திமுகவினரும் நட்பு ரீதியாக பேசிக்கொள்வதெல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு முடிவடைந்துவிட்டது. சில நேரங்களில் சில கசப்பான மருந்துகள்தான் அதிமுகவை வலிமைப்படுத்தும் என அவர் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். மேலும் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட, அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “அதிமுக தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த நிலைமை தற்போது இல்லை. அதிமுகவில் என்னை இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார் ? அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது” என்று கூறினார்.
அதிமுகவில் தொண்டர்களில் ஒருவருக்குத்தான் ராஜ்யசபா சீட் கொடுத்து வந்தார் ஜெயலலிதா. அது இப்போதும் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய சசிகலா, “மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும். தேவையின்றி சண்டை போடக்கூடாது. பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக முதல்வரும், நிதியமைச்சரும் முடிவு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், “ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் திமுகவின் ஓராண்டு பணி. ஏழை, எளிய மக்களுக்கு அம்மா மருந்தகம் பயன்பட்டது. அதனை நடத்த மறுக்கிறார்கள். இது போன்ற விசயங்களில் அரசியல் சாயம் பூச வேண்டாம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அவருக்காக கொண்டு வந்ததல்ல, அது மக்களுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது, அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படவில்லை. அதனால் தான் மக்கள் என்னை அழைக்கின்றனர்” என்றும் கூறினார் சசிகலா.
சசிகலாவை பொறுத்தவரை இனிமேல் அதிமுக உட்கட்சி பிரச்சனைகளை பெயரளவில் பேசிவிட்டு, திமுகவிற்கு எதிராக அனல் கக்கும் பேட்டிகள் மூலம் தாம் ஒரு வலுவான தலைவராக உருவாகி விடலாம் என கருதுகிறார். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இராமானுஜம்.கி