டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் நவம்பர் 26ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் துவக்க விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது அரசியல் சாசனத்தை, அரசியல் சாசன அவை ஏற்றுக்கொண்ட நாள் நவம்பர் 26 என்பதால் அந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் துவக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நமது தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னம் 6.5 மீட்டர் உயரமும், 9,500 கிலோ எடையும் கொண்ட வெண்கலத்தால் ஆனது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் உச்சியில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதை சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு துணை அமைப்பு இதனை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.










