2022ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த சர்கம் கௌஷல் உலக அழகிப்பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திருமணம் முடிந்த பெண்களுக்காக 1984ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் ’திருமதி உலக அழகி’ போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.
63 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சர்கம் கெளஷல் திருமதி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த ஆண்டு திருமதி உலக அழகி பட்டம் வென்ற ஷைலின் ஃபோர்டு, சர்கம் கெளஷலுக்கு அழகி பட்டத்துக்கான கிரீடத்தை அணிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பின் ’திருமதி உலக அழகி’ பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு இந்தியாவின் அதிதி கோவித்ரிகர் ’திருமதி உலக அழகி பட்டம்’ பெற்றது குறிப்பிடத்தக்கது.







