டெல்லி காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்

தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோராவை டெல்லி காவல் ஆணையராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் அரோரா 1988-ஆம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. சஞ்சய்…

தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோராவை டெல்லி காவல் ஆணையராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் அரோரா 1988-ஆம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. சஞ்சய் அரோரா ராஜஸ்தானில் உள்ள மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்று, தமிழ்நாடு காவல்துறையில் உதவி சூப்பிரண்டு முதல் மாவட்ட எஸ்பி, டிஐஜி, ஐஜி பின்னர் ஏடிஜிபி என பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றவர்.

சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டு வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர். 1991-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படையில் நியமிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் பணிபுரிந்துள்ளார். 2002 முதல் 2004 வரை கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

குற்றப்பிரிவு மற்றும் தலைமையகம் கூடுதல் ஆணையராகவும், போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும் சென்னை காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் சஞ்சய் அரோரா. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறையில் கமாண்டோ படை ஏடிஜிபி, நிர்வாகப்பிரி ஏடிஜிபி ஆகவும் பணியாற்றி உள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘ஆகஸ்ட் 20ஆம் தேதி 5 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்’ – தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்’

அதனைத்தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு சஞ்சய் அரோரா மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். அங்கு மத்திய ரிசர்வ் படையின் இயக்குநராக இருந்து, தற்போது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படை இயக்குநராகவும், சீனா, பூட்டான், மற்றும் அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும், எஸ்எஸ்பி எனும் நுண்ணறிவு பிரிவு இயக்குநராகவும் கூடுதலாகப் பொறுப்பாக வகித்து வந்தார். இந்நிலையில், அவரை டெல்லி காவல் துறையின் காவல் ஆணையராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல் துறை உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா அயல் பணியில் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.