சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம்,  சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ஆம்…

புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம்,  சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பார்த்த இளைஞர்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.  இதனையடுத்து அந்தத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி,  ஆய்விற்காக பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் அறிக்கை ஏப். 29 பெறப்பட்டதாகவும், குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வெளியிட்ட செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில்,  இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.