புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் யூ-டியூப் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.
இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் போன்ற சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் நடனமாடினர். இந்நிலையில், இந்தப் பாடல் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த பாடகி விஷ்ணுபிரியா இந்தப் பாடலை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மறு ஆக்கம் செய்துள்ளார்.
இந்தப் பாடலை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் ஒருவர் “ஊ சொல்றியா மாமா” பாடல் வரியை சற்றே மாற்றினார். இதை அந்தக் குழுவில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவுடன், நமது சுற்றுச்சூழலை அழிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்துமாறு வரிகளை மாற்றி எழுதவும் அவரை உற்சாகப்படுத்தினர்.
இதையடுத்து, அவர் புதிய வரிகளை எழுத, விஷ்ணுபிரியா பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் மறுபதிப்பை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பனை மரம் ஏறுபவரான கருப்பையா வெளியிட்டார்.








