முக்கியச் செய்திகள் தமிழகம்

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்திற்கும் திருமணம்!

மம்தா பானர்ஜி – கம்யூனிசம் இந்த பெயர்களை மேற்கு மேற்கு வங்கத்தில் உச்சரித்தால் குழந்தைகூட சொல்லும் இவர்கள் பரம எதிரிகள் என்று ஆனால் தமிழகத்திலோ கம்யூனிசத்தின் முந்தைய நிலையான சோசலிசம் என பெயர் கொண்டவரை திருமணம் செய்கிறார் மம்தா பானர்ஜி என பெயர் வைத்தவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் அவரது மூன்றாவது மகனின் திருமண அழைப்பிதழ்தான் இந்த சுவாரஸ்யமான செய்திக்கு முக்கிய காரணம்.

கம்யூனிச பற்றுதான் பெயருக்கு காரணம்

திருமண அழைப்பிதழைத் தோழர் மோகன் நண்பர்களுக்குக் கொடுக்கும்போதே அவர்களுடைய புருவங்கள் உயர்கின்றன. பொதுவாக திருமண அழைப்பிதழை ஒருவரிடம் கொடுத்தால் ‘என்றைக்குத் திருமணம் என கேட்பார்கள்’ ஆனால் தோழர் மோகன் கொடுக்கும் திருமண அழைப்பிதழைப் படிப்பவர்கள் சோசலிசத்துக்கும் மம்தா பானர்ஜிக்குமா திருமணமா என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.

கம்யூனிஸ்ட் என்பதால் தனது மகன்களுக்கு கட்சியின் கொள்கைகளைப் பெயராக வைத்ததாக கூறுகிறார் மோகன், “சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலக நாடுகளில் இதன்பிறகு கம்யூனிசமே உருவாகாது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கம்யூனிசத்திற்கு என்றுமே அழிவில்லை என்பதை உணர்த்தவே என் முதல் மகனுக்கு ‘கம்யூனிசம்’ என பெயர் வைத்தேன். ரஷ்யத் தலைவர் லெனின் மீது கொண்ட பற்று காரணமாக 2-வது மகனுக்கு லெனினிசம் என்றும் மூன்றாவது மகனுக்கு ‘சோசலிசம்’ என பெயர் வைத்ததாக கூறுகிறார் தோழர் மோகன்.

கம்யூனிச கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இப்படி பெயர் வைப்பது என்பது புதியதல்ல. தமிழ்நாட்டில் மாஸ்கோ,ரஷ்யா என்றெல்லாம் கூட பெயர்கள் உண்டு. ஆனால் மோகனின் மகன் சோசலிசம் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் மம்தா பானர்ஜி என்பதுதான் இங்கு ரசிக்கத்தக்க நகை முரணாக உள்ளது.

கம்யூனிஸ்ட் குடும்பத்தில் இணையும் காங்கிரஸ்

இதற்கு காரணம் மணப்பெண்ணின் குடும்பம் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பம். இளம் தலைவராக காங்கிரஸில் வலம் வந்த மேற்கு வங்கத்தின் சிங்க பெண் என்றிழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் பெயரை தங்கள் மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் பழனிசாமி நீலாம்பாள் தம்பதியினர்.

மேற்கு வங்கத்தில் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக களமாடுகிறார் அந்த மம்தா பானர்ஜி. ஆனால் சேலத்திலோ தீவிர கம்யூனிஸ்ட் குடும்பமான மோகனின் குடும்பத்தில் ஐக்கியமாக உள்ளார் இந்த மம்தா பானர்ஜி.

சோசலிசம் – மம்தா பானர்ஜியின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. இதனால் சோசலிசம் – மம்தா பானர்ஜியின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘பெயர் முக்கியம் பிகிலு” என்று நகைச்சுவையாக டேக் செய்கின்றனர் நமது நெட்டிசன்கள்..

செய்தி: நேதாஜி

Advertisement:

Related posts

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!

வாக்குகளுக்காக இரட்டை வேடமிடுகிறது திமுக: -எல்.முருகன் விமர்சனம்!

Niruban Chakkaaravarthi

கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Ezhilarasan