புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததிலிருந்தே அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அமைச்சர்களின் தன்னிச்சையான செயல்பாடு எனத் தொடர்ந்து மோதல் போக்குடனே இருந்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்று கடந்த 10 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரை முடிந்த உடனேயே காலவரையரை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது சர்ச்சையானது. பின்னர் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த திங்கட்கிழமை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மூன்று தினங்களாக பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், ‘எனக்குத் தெரியாமலேயே என்னுடைய தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கிறார்கள். நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்பதால் அரசு இப்படிச் செய்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாஸும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பின்னர் சட்டசபையில் பேசிய பாஜக எம்.எம்.ஏ கல்யாணசுந்தரம், அறநிலையத்துறை எம்.எல்.ஏக்களின் ஆலோசனையை கேட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதே விதிமுறை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் கல்யாணசுந்தரம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இதை பின்பற்றுகிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இதை கடைப்பிடிக்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பதற்காக பழிவாங்குகிறார்களா? என்பதை இங்கேயே சொல்லிவிடுங்கள். நாங்கள் கையெழுத்துப் போட்டே முதல்வராக்கியுள்ளோம். எங்களுக்கு இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக, பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி சபாநாயகர், உள்துறை அமைச்சர் தொகுதியிலும் இதேநிலைதான் என கல்யாணசுந்தரம் குற்றம்சாட்டினார்.
அண்மைச் செய்தி: ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்; செப்டம்பர் 15ம் தேதி தொடக்கம்?’
இதேபோல், இன்றைய கூட்டத்திலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஏனாம் தொகுதியிலிருந்து தேர்வான பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் தனது தொகுதியில் ஒன்றரை வருடங்களாகச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏற்படுத்தித் தரவில்லை எனப் பேரவையில் கேள்வி எழுப்பினார். பாஜகவிற்கு ஆதரவு தருகிறார்கள் என்ற காரணத்திற்காக சுயேச்சை எம்.எல்.ஏக்களுக்கு அலுவலகம் தர மறுக்கப்படுவதாக கூட்டணி அரசை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏக்கள் பேரவையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று பட்ஜெட் போடுகின்றீர்கள். ஆனால், பாஜக எம்.எல்.ஏ தொகுதியை புறக்கணிப்பது நியாயமில்லை. நாங்கள் ஓட்டுப் போட்டு என்.ஆர்.காங்கிரஸ் முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அமைச்சரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால், பாஜக எம்.எல்.ஏ தொகுதியை புறக்கணிப்பதாக அக்கட்சி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே சட்டசபையில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.









