106 வயதில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக திகழும் ஹரியானாவை சேர்ந்த ரம்பை, கடந்த 2 ஆண்டுகளில் 200 பதக்கங்களை வென்று சத்தமே இல்லாமல் சாதித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்ரியில் உள்ள கத்மா என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரம்பை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது 104 வயதில் தடகள போட்டியில் பங்கேற்க தொடங்கிய ரம்பை, கடந்த ஆண்டு 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலகச் சாதனை படைத்தார். இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி டேராடூனில் நடைபெற்ற 18வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கமும், 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கமும், குண்டு எறிதலில் ஒரு தங்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
ரம்பை போட்டியில் வெற்றி பெற்று வந்த போது, கால்களை மசாஜ் செய்ய அவரது பேத்தி முயன்ற போது “நான் நன்றாக இருக்கிறேன். தேவைப்படும் வேறு யாருக்காவது உதவவும் எனக் கூறியிருக்கிறார். 106 வயதிலும் தன்னமிக்கையுடனும் முழு உத்வேகத்துடனும் ரம்பை இருப்பதை பார்த்து அங்கிருந்தோர் பாராட்டியிருக்கின்றனர்.
ரம்பை இதுவரை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடைபெற்ற சுமார் 14 விளையாட்டு போட்டி தொடர்களில் பங்கேற்று, 200 பதக்கங்களை வென்று சாதித்துள்ளார். இந்நிலையில், 106 வயது ரம்பை 3 தங்க பதக்கங்களை வென்றிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ள நடிகர் மாதவன், இதுதான் உண்மையான உத்வேகம் என பாராட்டியுள்ளார். மாதவனை போன்று பல பிரபலங்கள் 106 வயது ரம்பையின் சாதனையை பாராட்டி மகிழ்ந்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.







