ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரத்தில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று மாலை ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் கட்டை, தடிகள், கத்தி ஆகியவை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதுடன் ஒரு கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று மாலை 5:30 மணி அளவில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் அருகே கூட்டமாக வந்து சேர்ந்த ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் கையில் கட்டை, தடிகள், கத்தி ஆகியவை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து அங்கிருந்த பர்னிச்சர்களை அடித்து உடைத்தனர். கம்ப்யூட்டர்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனையும் படியுங்கள்: ஜேஎன்யூ-வில் ஏபிவிபி தாக்குதல் – துணைவேந்தர் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்நாடு மாணவர்கள் குற்றச்சாட்டு
இந்த வன்முறை நடந்த போது அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஆளுங்கட்சியினர் வன்முறையில் இறங்கியவுடன் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திலிருந்து கன்னவரம் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் போலீசார் விரைந்து செயல்படவில்லை என்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டு இருக்காது என்றும் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள் போலீசார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
கன்னவரம் தொகுதி ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வல்லபநேனி வம்சி ஆதரவாளர்களே வன்முறையில் ஈடுபட்டதாகவும் போலீசார் இதை வேடிக்கை பார்த்ததாகவும் தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கன்னவரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
– யாழன்