வரும் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கீரினிங் மற்றும் ஆர்டிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியனார்.
தொடர்ந்து பேசிய அவர், 13 நிமிடத்திற்குள்ளாக பரிசோதனை மேற்கொண்டு முடிவு அளிக்கும் திட்டம் ஓரிரு தினங்களில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும், மக்கள் நலனுக்காகவே அதிக கூட்டம் கூடும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு, வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.







