மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் கடந்த 11ம் தேதி வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை அளவு பதிவானது. சீர்காழியில் 44 சென்டிமீட்டரும், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் சீர்காழி தாலுக்கா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்தது.
இந்த பாதிப்புகள் குறித்து பார்வையிடவும் நிவாரணம் வழங்கவும் பாஜக தலைவர் அண்ணாமலை வருகை புரிந்தார். முதலில் கொள்ளிடம் ஒன்றியம் கொடிக்கால் கிராமத்தில் கனமழையால் திப்படைந்த வீடுகளை பார்வையிட்டார். அவர் பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நூறு பேருக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

அடுத்ததாக நல்லூர், அகர வட்டாரம் வேட்டங்குடி பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரில் இறங்கி பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து திருவெண்காடு, ராதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பூம்புகார் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது எந்த வகையிலும் போதாது. எனவே நிவாரண தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அது போல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரண தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கின்ற நிதியிலிருந்து வருகிறது. எனவே மத்திய அரசு கொடுக்கின்ற நிதியோடு, மாநில அரசும் சேர்த்து கூடுதலாக கொடுக்க வேண்டும். வேலையில்லாமல் உள்ள குடும்பங்களுக்கு 30 நாட்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் பேருந்து எரிந்தது. அதற்கு தமிழக அரசு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை. முறையாக விசாரணை செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும். இதற்காக டெல்லி சென்று கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு அமைத்து இரண்டு நாட்களில் மத்திய நிதி அமைச்சரையும், வேளாண் துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட உள்ளனர்.







