மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் பிரசத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டலகால பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து மாலையிட்டு சபரிமலைக்கு செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மிக குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்த கட்டுபாடுகள் எதுவுமின்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, கோவிலின் நடையை திறந்து வைத்தார். அதன்படி, பதினெட்டாம் படி இறங்கி சென்று கோவில் முன் உள் அழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நாளை முதல் பூஜைகள் நடைபெற உள்ளன. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பின், அன்று இரவு சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.
தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் புல்மேடு மற்றும் கரிமலை பாதை திறக்கப்பட்டுள்ளது. வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் இருக்ககைகளை http://www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








