பொங்கல் பரிசுத் தொகுப்பாக குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்கள் மனநிறைவோடு பொங்கலைக் கொண்டாடும் வகையில், குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச – வேட்டி சேலை வழங்க வேண்டும் என கூறியுள்ள அவர், தமிழக அரசு விவசாயிகள் விளைவித்த செங்கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.







