பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 28 பேரும், மொத்தமாக 1,136 உயரிழந்துள்ளனர்.
1,634 பேர் காயமடைந்துள்ள நிலையில், 57.73 லட்சம் வரை பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண் கழகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இடைவிடாது பெய்யும் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. 3 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வரும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
அந்நாட்டில் 23 மாவட்டங்கள் பேரிடரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
உலகின் 5 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பாகிஸ்தானில் மீட்புப் பணிகளுக்காக முதல் முறையாக அந்நாட்டு கடற்படை களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்கள் கடலின் ஒரு பகுதியாகத் தோன்றத் தொடங்கியுள்ளன.
அந்நாட்டு நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறுகையில், ”சேதம் எவ்வளவு என்று உடனடியாக மதிப்பீடு செய்ய முடியவில்லை. 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும். எங்களிடம் போதிய நிதி இல்லை.
ஆனால், எங்களால் எப்படியாவது இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டும் வர முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.








