”அதிமுகவை தனது குடும்பத்தின் சொத்தாக்க ஓபிஎஸ் முயற்சி”- ஆர்.பி.உதயகுமார் சாடல்

அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முயல்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் பிரிவினையை தொடக்கி வைத்ததே ஓ.பன்னீர் செல்வம்தான் எனவும் காட்டமாக ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.  அதிமுகவில் அக்கட்சியின்…

அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முயல்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் பிரிவினையை தொடக்கி வைத்ததே ஓ.பன்னீர் செல்வம்தான் எனவும் காட்டமாக ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். 

அதிமுகவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து மோதல்போக்கு நீடித்து வரும்நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு காட்டமான விமர்சனங்களை தொடுத்துள்ளார்.

மௌன சிரிப்பிலே ஒரு மர்ம தேசத்தை உள்ளடக்கி, ஒரு புண்ணியவான் போல் வெளி தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடியவர் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறியுள்ள ஆர்.பி. உதயகுமார், 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அவரது பதவிக்கு ஆபத்து வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அப்படி ஆபத்து வருகிற சூழ்நிலை எதனால் ஏற்பட்டது என்பதை ஓ.பன்னீர்செல்வத்தின்  மனசாட்சிக்கு விட்டு விடுவதாகவும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

அதன் பின்னர் ஜெயலலிதா தன்னுடைய அயராத உழைப்பால், இரவு பகல் பாராமல் மேற்கொண்ட சேவையால் மீண்டும் 2011 ஆண்டில் ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ள ஆர்.பி.உதயகுமார், அப்போதும் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தது,  அதற்கு  யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வத்தை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, முதலமைச்சர் பதவி பெற்று விடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் செய்த சித்துவிளையாட்டுகளை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த,  அவர் மீது  ஓபிஎஸ் அபாண்ட பழி சுமத்தியதாக கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார்,  அதிமுகவில் பிரிவினையை தொடக்கி வைத்ததே முன்னாள் முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் பதவி மீது கொண்ட வெறியின் காரணமாக, அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்குவதற்கு அக்கட்சியில் பிரிவினை நாடகத்தை ஓபிஎஸ் அரங்கேற்றியதாகவும்,  முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தபோதுதான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம்  இருப்பதாக சந்தேகம் எழுப்பியதாகவும் ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். துணை முதலமைச்சராக இருந்த போது, ஏழு முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ்,  பதவி போன பின்பு  ஆஜராகி அந்தர்பல்டியாக தலைகீழாக மாற்றி கருத்துக்களை சொன்னது ஏன் எனவும் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவிற்காக எடப்பாடி பழனிசாமி கடுமையாக போராடி வருவதாக கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ் அரசியல் அடையாளம் தெரியாமல் இருந்த பொழுது, அவரை அழைத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக்கி , தமிழ்நாட்டின் துணைமுதலமைச்சராக்கி அழகு பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார்.  அவருக்கு வந்துள்ள சோதனைகள் என்ன என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  ஓ.பன்னீர் செல்வத்தினுடைய உண்மை முகம் வெளியில் தெரியும் நாள் வெகு தொலைவில் இல்லை எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.