தவறி விழுந்ததில் வெடித்த வெடிகுண்டு: ரவுடி பலத்த காயம்!

மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார்.  மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்று…

மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து
வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார். 

மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பேப்பர் பையில் இருந்து ஒரு பொருள் கீழே விழுந்ததில் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அருகில் இருந்த டீ கடையின் கண்ணாடியும் நொறுங்கியது.

சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சத்தம் ஏற்பட்டு கண்ணாடி நொறுங்கியது தெரியவந்தது. மேலும், சிறிது தூரத்தில் காலில் பலத்த காயங்களுடன் ஒருவர் படுத்து
கிடப்பதாக வந்த தகவலையடுத்து, அந்த நபரை போலீசார் விசாரித்தனர்.

விசராணையில், ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த வினோத்குமார் (27) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பேப்பர் பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவரது நண்பர்கள்அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் யாரையாவது பழி தீர்க்கவும், சதித் திட்டம் தீட்டவும் நாட்டு வெடிகுண்டை எடுத்துச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், காயமடைந்த நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.