சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி (வயது 20). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொளத்தூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான (பி பிரிவு ரவுடி) இவர், சுசித்ரா (வயது 21) என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். சுசித்ராவிற்கு ஏற்கனவே சூர்யா என்பவருடன் திருமணமாகியுள்ளது.
இந்த நிலையில், ஆதியுடன் உறவில் இருந்த சுசித்ராவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த சில நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதி, தனது தோழி சுசித்ராவிற்கும், இறந்த குழந்தைக்கும் ஆறுதல் கூறுவதற்காக நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசித்ராவை சந்தித்து நலம் விசாரித்த பிறகு, வார்டுக்கு வெளியே உள்ள வராண்டாவில் மதுபோதையில் உறங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில், சுசித்ராவின் கணவரான சூர்யா மற்றும் அவரது நண்பர்களான அலிபாய், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் அங்கு வந்துள்ளனர். உறங்கிக்கொண்டிருந்த ஆதியை சுற்றி வளைத்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தலை, கை, கால்கள் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்”. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், ஆதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கீழ்பாக்கம் மாவட்ட காவல் உதவி ஆணையர் துறை ,கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த முதல் நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி, ஆகிய நான்கு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து சென்னை ஆணையர் அருண் I.P.S. உத்தரவு பிறப்பித்துள்ளார்.







