டி 20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 3 அவது முறையாக டி 20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த சூழலில் டி 20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் கோப்பையுடன் அகமதாபாத்தில் உள்ள ஓர் அனுமன் கோவிலுக்குச் சென்றனர்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த நிலையில் மற்றொரு சர்ச்சை உண்டாகியுள்ளது. டி 20 உலக கோப்பையை வென்ற பிறகு நடைபெற்ற இந்திய அணியின் கொண்டாட்டத்தின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது பெங்களூரு சிவாஜி நகர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரை புனேவை சேர்ந்த வழக்கறிஞர் வாஜேத் கான் பிட்கர் பதிவு செய்துள்ளார். அதில் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் மேடையில் படுத்துக் கொண்டிருப்பதாகவும், அந்த நேரத்தில் மூவர்ணக் கொடி அவரது தோளில் போர்த்தப்பட்டிருந்ததாகவும் இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்படப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக வழக்கறிஞர் வாஜேத் கான் பிட்கர் கூறியதாவது ; டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகான இந்திய அணியின் கொண்டாட்டங்களின் போது ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் நடனமாடினார். அப்போது தேசியக் கொடி அவரது முதுகில் கட்டப்பட்டிருந்தது. 1971 தேசியக் கொடிச் சட்டத்தின் பிரிவு 2 இன் படி, தேசியக் கொடியின் கண்ணியத்தை நாம் மதிக்க வேண்டும். ஆனால் ஹர்திக் பாண்டியா வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தனது காதலியுடன் தேசியக் கொடியை அணிந்து படுத்துக் கொண்டார். இது தேசியக் கொடிக்கு அவமானம் என்று அவர் கூறினார்.
இதனை தொடர்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கல் இணையத்தில் வைரலாகி வருகின்றன.








