காரைக்காலில் போலீஸ்காரரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் அடுத்த பூவம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். 36 வயதான இவர் காரைக்கால் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு காரைக்கால் அடுத்த பிள்ளை தெருவாசல் சந்தைதிடலுக்கு சென்ற இவர், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மழை பெய்த காரணத்தால், சந்தைதிடல் அருகே உள்ள கூரை கொட்டகையில் ஒதுங்கி நின்றுள்ளார்.
அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த உடைந்த பாட்டில், கற்களால் பிரகாஷை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த காவலர் பிரகாஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காவலர் பிரகாஷை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் மற்றும் அத்திக்குள் ரகுமான் என்பவரையும் கைது செய்தனர்.
கைதான அத்திக்குள் ரகுமானை காரைக்கால் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர். இரண்டு சிறுவர்களும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் ஒரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்காலில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







