சென்னையில் வழிகாட்டி பலகை சரிந்து விபத்து

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் மாநகர பேருந்து மோதி சாலை வழிக்காட்டி பலகை பெயர்ந்து விழுந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் பலத்த காயமடைந்தார். தாம்பரத்தில் இருந்து சென்னை கிண்டி ஆசர்கானா பேருந்து…

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் மாநகர பேருந்து மோதி சாலை வழிக்காட்டி பலகை பெயர்ந்து விழுந்து விழுந்ததில் பைக்கில் சென்றவர் பலத்த காயமடைந்தார்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கிண்டி ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் 70 வி மாநகர பேருந்து இன்று மாலை அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த சாலை வழிக்காட்டி பெயர் பலகை மீது மோதி  விபத்துக்குள்ளானது.

இதில் ராட்சத பெயர் பலகை பெயர்ந்து ஜிஎஸ்டி சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வேன் மீதும் விழுந்ததில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தலையில் படுகாயமடைந்த வாகன ஓட்டியை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராட்சத சாலைவழிக்காட்டி பெயர் பலகை சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிண்டி கத்திப்பாரா நோக்கி வரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். இதையடுத்து கிரேன் மூலம் சாலையில் விழுந்துள்ள சாலை வழிகாட்டி பெயர் பலகையை அப்புறப்படுத்தப்பட்டது.

பயங்கர விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுனர், நடத்துனர் அந்த வழியாக சென்ற வேறொரு பேருந்தில் தப்பி சென்று விட்டதாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் ஓட்டுனர் ரகுநாதன், நடத்துனர் சின்னைய்யா ஆகிய இருவரும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயில் பாலம் கட்டும்பணி நடந்த போது இரும்பு கம்பி சாலையில் விழுந்ததில் பைக்கில் சென்ற மென்பொறியாளர் பலியான சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.