இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி படங்களை அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் அமீர்கான் தயாரித்து நடிக்கும் படம் லால் சிங் சத்தா படம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரெட்ஜெயன்ட் மூவிஸ் மற்றும் வயோகாம் 18 ஸ்டுடியோல் இணைந்து வழங்குகிறது.
இந்நிலையில் லால் சிங் சத்தா படக்குழுவினர் சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான், நாக சைதன்யா, உதயநிதி ஸ்டாலின், நடிகை மோனா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், நிறைய படங்கள் ரெட் ஜெயன்ட் மூலம் பண்ணி வருகிறேன். அப்போது தான் அமீர் கான் படம் எனக்கு ரிலீஸ் செய்ய வாய்ப்பு வந்தது. அய்யோ ஹிந்தி படம் எல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். உடனே அமீர் கான் என்னை தொடர்பு கொண்டார் அதிலும் வீடியோ காலில் வந்தார். உங்களுடன் படம் பண்ண வேண்டும் என்று சொன்னார். உடனே ஓகே சொல்லி விட்டேன். படம் சிறப்பாக உள்ளது என்றார்.
இந்தியை எதிர்க்கும் போது இந்தி படத்தை வெளியிடுவாது பிரச்சினைகள் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தி கற்பதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் கத்துக்கலாம். இந்தி திணிப்பு தான் தவறு. அதை தான் எதிர்க்கிறோம் என்றும், மொழியை தாண்டி அவரது ரசிகன் நான். அவர் படங்களை பார்த்திருக்கிறேன். இதை ஒரு ரசிகனாக வெளியிடுவதாக எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்.
இயக்குநர் அத்வைத் சந்தன் பேசுகையில், இந்த படம் நன்றாகவும், மக்கள் விரும்பும் வகையில் இருக்கும். இந்த படம் ஆசிர்வதிக்கப்பட்ட படமாக இருக்கிறது. காரணம் அமீர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்றும், இந்தி மற்றும் தமிழில் படம் எடுத்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் அமீர்கான், முதலில் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டில் லால்சிங் சத்தா படத்தை வெளியிடுவதற்கு உதயநிதிக்கு நன்றியை தெரிவித்தார். ரசிகர்களின் அன்பும், அக்கறையும் எப்போதும் வேண்டும் எனவும், படம் வெளியாகும் முன்பே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறியதோடு, நீங்கள் இந்த படத்தை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
ரீமேக் படங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 14 வருடங்களுக்கு முன், அதுல் கதை
எழுதியதாகவும், கிளாசிக் படமாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. லால் சிங் சத்தா சிறந்த திரைப்படம். பல நினைவுகளை கொடுத்துள்ளது என்று படத்தினை பற்றியும், வித்தியாசமான, பல கலாச்சாரங்களை கொண்ட ஒரு கதாபாத்திரத்தை அமைந்ததாகவும் கூறினார்.








