உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சிவகாசியிலிருந்து தேனி நோக்கி சென்ற கார் அதிகாலை 2 மணியளவில் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கடமலைக்குண்டு காவேரி தோட்டத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மாரியப்பன், மாயக்கிருஷ்ணம்மாள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சுருளியம்மாள், விஜயபாரதி, சித்ரா, ஷர்வீன், அசோக்குமார் என்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கா.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த கணவன், மனைவி உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.