சென்னையில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் தட்ப வெப்பநிலை காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. பகல் நேரங்களிலும் கொசுக்கள் காணப்படுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலவும் தட்ப வெட்ப நிலை காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வீடுகளில், குளிர்சாதன பெட்டியின் பின்பக்க தொட்டி, தண்ணீர் தேங்கக்கூடிய பூந்தொட்டிகளிலும், கொசுப் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. காலை நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் கொசுக்களின் வாழ்நாளும் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொசுத் தொல்லையால் நிம்மதியான உறக்கமின்றி ஒருபுறம் தவித்து வரும் நிலையில், உடல் உபாதைகளும் ஏற்படுவதால் மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
கொசுக்களை ஒழிக்க, தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணி, கூவம் மற்றும் கால்வாய்களில் ட்ரோன்கள் மூலமாக கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீர்நிலைகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்க முடியாத இடங்களில், கொசு ஒழிப்பு எண்ணெய் பந்து மற்றும் கொசு ஒழிப்பு எண்ணெய் நிரப்பப்பட்ட ‘பாட்டில்’கள் வாயிலாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிக்கும் பணியில் 3000 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தாலும் கொசுக்கள் ஒழிந்த பாடில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
2017-ம் ஆண்டு டெங்கு பாதிப்பின் போது, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். கொசு உற்பத்திக்கு காரணமான பலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கையும் அவசியம் என்ற கருத்தும் எழ தொடங்கியுள்ளது. என்னதான் மாநகராட்சி சார்பில் தீவிரமாக கொசு ஒழிப்பு பணி நடைபெற்றாலும், தங்கள் வீட்டின் சுற்றுப்புறம், மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்கும் பொருட்களை அகற்றி, தூய்மையாக பராமரித்து மாநகராட்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொசுவை ஒழிக்க முடியும்.
விக்னேஷ், நியூஸ் 7 தமிழ்









