இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்லும் புகழ் வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான ‘திராவிட மணி’ இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று. சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக குரல் எழுப்பியவரும், சமத்துவமும் சமூகநீதியும் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை இலக்காகக் கொண்டு போராடியவருமான இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று. தனது எழுத்து, பேச்சு மற்றும் சமூகப் பணிகளின் மூலமாகச் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ந்து களமாடி, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, “‘பறையன்’ இதழைத் தொடங்கி, கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும். அவரது சமூக நீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இந்நாளில் போற்றி வணங்கி, அவரது புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்” என்றார்.
வீதி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர். பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடியவர். தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமத்துவ சமுதாயம் அமையவும், தளர்வில்லாமல் உழைத்தவர். சமுதாயச் சிந்தனையாளர், ஊடகவியலாளர், அரசியல் தலைவர் எனப் பன்முகம் கொண்ட தலைவராக விளங்கிய ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காகவும் பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தில் அவரது சமுதாய சீர்திருத்தப் பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.




