உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை சமத்துவத்துக்கான கொள்கைகளுக்குள் வகைப்படுத்த முடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக பல்வேறு மாநில அரசுகள் அரசியல் கட்சிகள் தனிநபர்கள் ஆகியோர் சார்பாக நூற்றுக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பல்வேறு தரப்பில் வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக அரசு சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அரசியல் சாசன பிரிவு 14 என்பது சமத்துவத்தை கடைபிடிக்க சொல்லும் ஒரு அம்சம் ஆகும். இதில் பொருளாதார அளவுகோலை கொண்டு வருவது என்பது பிரிவு 14ன் அடிப்படைத் தன்மையையே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது.
மேலும் இந்திரா சாஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் உள்ளது.
பொருளாதார அளவுகோலின் கீழ் இட ஒதுக்கீடுகளை கொண்டு வருவது என்பது அரசியல் சாசன பிரிவு 14-ஐ அப்பட்டமாக மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் வகையில் தான் இந்த 10% இட ஒதுக்கீடு என்பது கொண்டுவரப்பட்டுள்ளது.
அப்போது தலைமை நீதிபதி இவை ஒவ்வொரு சூழ்நிலையின் படி தானே வகைப்படுத்த முடியும் ? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடை கொண்டு வர வேண்டும் என்றால் உச்சநீதிமன்றம் தான் வழங்கிய இந்திரா சாஹானி வழக்கின் தீர்ப்பை தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை சமத்துவத்துவத்துக்கான கொள்கைகளுக்குள் கொண்டு வர இயலாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








