“எஸ்சி, எஸ்டியினருக்கான இட ஒதுக்கீடு பாஜக ஆட்சியில் புறக்கணிப்பு!” – திருமாவளவன் எம்.பி!

உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு பாஜக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயர் கல்வித்துறையின் நிலவரம் குறித்து…

உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு பாஜக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயர் கல்வித்துறையின் நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடப்படும். தற்போது கடந்த 2019-20ம் ஆண்டின் அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையின்படி உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு தற்போதைய பாஜக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அநீதிகளை களைந்து எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லீம்களுக்கு உரிய எண்ணிக்கையில் உயர்கல்வித் துறையில் பணி நியமனம் வழங்குவதற்கு சிறப்பு பணியமர்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2014-15ம் ஆண்டு வெளியிடப்பட்ட உயர் கல்வித்துறை அறிக்கையில், 14,73,255 ஆசிரியர் பணியிடங்களில் 7.1% எஸ்டி பிரிவினரும், 2.1% எஸ்சி பிரிவினரும் 3.2% முஸ்லீம்கள் இருந்தது தெரிய வந்தது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 15,03,156 பேர் பணிபுரிவது தெரிய வந்துள்ளது என்றும், அதில் 9% எஸ்சி பிரிவினரும், 2.4% எஸ்டி பிரிவினரும், 3.2% முஸ்லீம்களும் என உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தற்போதைய மக்கள் தொகையில் 16.6% உள்ள எஸ்சி பிரிவினரும், 8.6% எஸ்டி பிரிவினரும், 14.2% முஸ்லீம்களும் உள்ளனர்.”

இச்சூழலில் இந்த பிரிவினருக்கு இந்தியாவில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படவில்லையென திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேற்குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உறுதியளிக்கப்பட்ட இடஒதுக்கீடு உயர் கல்வித்துறையில் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லீம்களுக்கு உரிமைகளை வழங்குவதில் அக்கறையற்ற அரசாக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.