நாகர்கோவில் அருகே திருமணத்தை மீறிய காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் அதேபகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வித்யா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வித்யாவுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இவர்களின் உறவு சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் வேறொரு பெண்ணுடன் சுரேஷ்குமாருக்கு திருமணம் நடத்திவைத்தனர். திருமணம் முடிந்து சுரேஷ்குமார் அவரது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் வித்யா சுரேஷ் குமாரை மீண்டும் சந்தித்துள்ளார்.
பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து ஒன்றாக தங்கியிருந்துள்ளனர். இதனால் மனைவியை காணவில்லை என வித்யாவின் கணவர் சுபாஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. போலீசின் விசாரணைக்கு பயந்து காதலர்கள் இருவரும் விஷம் அருந்தியதில் புதியதாக திருமணம் முடித்திருந்த சுரேஷ்குமார் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் வித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







