கண்கவர் அணிவகுப்புகளுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

73வது குடியரசு தின விழாவையொட்டி கொடியேற்றத்திற்கு பிறகு டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் இசை மற்றும் நடனக்கலை என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா தொடங்குவதற்கு…

73வது குடியரசு தின விழாவையொட்டி கொடியேற்றத்திற்கு பிறகு டெல்லி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் இசை மற்றும் நடனக்கலை என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா தொடங்குவதற்கு முன்பு, டெல்லியிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விழாவிற்கு வந்த குடியரசுத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்பு அளித்து மூவர்ணக் கொடி ஏற்றும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசியகீதம் இசைக்கப்பட்ட போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து மலர்தூவி சென்றது.

இதனைத் தொடர்ந்து முப்படைகளின் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு மரியாதை தொடங்கியது. அதில், பீரங்கிகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் பங்குப்பெற்றன. மேலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இடம்பெற்றன. இந்த அணிவகுப்பில் மொத்தம் 14 வாகனங்கள் இடம்பெற்றன.

அதன்படி, அருணாச்சல் பிரதேசம்,சத்தீஸ்கர், ஹரியானா, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் இடம்பெற்றன.

பின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு முடிந்தவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 450 நடனக் கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. இறுதியில், ராஜபாதைக்கு மேல் 75 போர் விமானங்களின் சாகசங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அனுமதி பெற்ற பார்வையாளர்கள் விடியற்காலை முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் முக்கியமாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க அனுமதி கிடையாது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.