கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர்  ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு…

கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை
முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர்  ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு
தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி முன்னிலையில் கலாஷேத்ரா
இயக்குநர் ரேவதி ராமசந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி,  கல்லூரி உள்ளீட்டு
புகார் குழு( ICC கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் சென்னை
சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள மகளிர் ஆணையம் அலுவலகத்தில் ஆஜராகினர். சுமார் 40 நிமிடங்கள் இந்த விசாரணையானது நடைபெற்றது.

இந்த விசாரணையின் பின்பு நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு
மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்ததாவது..

கலாஷேத்ரா கல்லூரிக்கு நாங்கள் விசாரணைக்கு சென்ற போது இயக்குநர் மற்றும்
துணை இயக்குநர் இல்லாத காரணத்தால் இன்று நேரில் விளக்கம் கேட்க
அழைத்திருந்தோம். கலாஷேத்ரா கல்லூரியின்  கட்டமைப்பு குறித்தும் அங்கு
படிக்கக் கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரித்தோம்.  அதே போல் மாணவிகள்  ஆஃப்லைன் வழியாக தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்
அதையும் இயக்குநரிடம் தெரிவித்துள்ளோம்.

மேலும் மாணவிகள் இதுவரை பாலியல் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறித்து
விசாரணை மேற்கொள்ள ஐ சி சி கமிட்டியின் உள்ளிட்டு புகார் குழு அறிக்கையை
கேட்டுள்ளோம்.  நாளை மறுநாள் ஐசிசி கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய
அறிவுறுத்தி உள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் இது தொடர்பாக  யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்
தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்த நிலையில் இது குறித்த விசாரணையை மேற்கொண்டு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். மகளிர் ஆணையத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் 80 முதல் 90 புகார் மனுக்கள் வருகின்றன.

அதிலும் கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவில் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. அதே போல் பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள், அச்சப்படுகிறார்கள். எனவே பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு தயங்காமல் நேரடியாக மகளிர் ஆணையத்திற்கு தபால் மூலமாகவுோ அல்லது chairscwtn@yahoo.co.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ  அல்லது 0442855155 தொலைபேசி எண்ணிற்கும் அழைத்து புகாரை தெரிவிக்கலாம்” என  தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.