“1000 ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” – அமைச்சர் ரமேஷ்!

9 திருக்கோயில்களில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலுரை வழங்கினார். பெரியாரின் பேரனாக இருந்து தன்னுடைய பணிகளை செய்து வருகிறார் முதலமைச்சர். அண்ணாவின் தம்பிகள் சட்டமன்றத்தில் அன்று இருந்தார்கள். இன்று முதலமைச்சர் விஜயின், தம்பிகளாக நாங்கள் இருக்கிறோம். இந்த சட்டமன்ற தேர்தல் ஒரு சூரசம்சாரமாக தான் இருந்தது. சாதி மற்றும் மத அரசியல் வீழ்த்தி இந்த ஆட்சி நடக்கிறது. எங்களுடைய வேலன் ஒரு ஜனநாயகத்தின் ஆட்சியை தமிழகத்தில் நிகழ்த்தியுள்ளார். இன்று எங்களுடைய வேலன் கையில் வேலேந்தி லஞ்சம் ஊழல் எதுவும் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகிறார்.

463 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டெடுக்க வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 45 ஏக்கர் கோவில் நிலத்துடன் இணைத்துள்ளோம், நகை மறுமதிப்பீடு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். கடந்த 20 வருடங்களாக நகை மறு மதிப்பீடு செய்யவில்லை. அறங்காவலர் நியமனம் சட்டப்படி நடைபெற்றதாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள். ஆனால் எவ்வளவு அரங்காவலர் என்னிடம் கண்ணீர் விட்டு அழுகிறார்கள் என்று எனக்கு தான் தெரியும்.

புதிய திட்டங்கள் அறிவிப்பு:

152 திருக்கோவில்களில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்,
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்படும்,
3 கோவில்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பொங்கல் மண்டபங்கள் அமைக்கப்படும்,
திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
1000 ஆண்டுகள் பழமையான 64 கோவில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுடன் கூடிய பாதுகாப்பு திறனாளர்களை உருவாக்கும் பயிற்சி வழங்கப்படும்.
சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்,
9 திருக்கோயில்களில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்,
08 திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்படும்,
மூன்று மரத்தேர் இந்த ஆண்டு செய்யப்படும்,
105 திருக்குளப்பணிகள் மேற்கொள்ளப்படும்,
11 கோவில்களில் தங்கும் விடுதி கட்டப்படும்,
கோவில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்,
அவசர கால ஊர்திகள் வழங்கப்படும்,
திருச்செந்தூர் கோவிலுக்கு நான்கு சிற்றுந்துகள் வழங்கப்படும்,
அன்னதானங்கள் வழங்கும் பணி விரிவாக்கம் செய்யப்படும்,
திருக்கோவில் தேர்வு பணிக்கு ஆணையம் அமைக்கப்படும்,
காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு அன்னதானம் வழங்கப்படும்,
ஆறுபடை திருக்கோள்களில் முன்மாதிரியான கோவில்கள் திட்ட அறிக்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.