தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே ரெம்டெசிவர் மருந்தை வழங்கும் தமிழக அரசின் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பாக வழங்கப்பட்டு வந்தது. சென்னை திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதற்கான விற்பனை மையங்கள் திறக்கப்பட்ட போதிலும் பொதுமக்களுடைய கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் சூழல் என்பது கேள்விக்குறியான நிலையில், தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை அந்தந்த மருத்துவமனைகள் மூலமாகவே வழங்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ரெம்டெசிவர் மருந்தை பெறுவதற்காக தனியாக இணையதளம் தொடங்கப்படும் என்றும், அந்த இணையதளம் மூலமாக மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்தை விண்ணப்பித்து அந்தந்த பிரதிநிதிகள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. அதன்படி இன்று காலை முதல் தமிழக அரசினுடைய இணையதளம் செயல்பட தொடங்கியது.
இந்த இணையதளத்தின் மூலமாக பெறப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அரசிடமிருந்து வாங்கக்கூடிய அதே விலையிலேயே நோயாளிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதேபோன்று ஆக்ஸிஜன் தேவைகளுக்காகவும் தனியார் மருத்துவமனைகள் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







