“ரூ.430 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்” – தமிழ்நாடு அரசு அறிக்கை!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “ரூ.430 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், ரூ.23.49 கோடியில் பெற்றோரை…

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“ரூ.430 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், ரூ.23.49 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்பு, ரூ.219 கோடி பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ரூ.67 கோடி பணிபுரியம் மகளிர் விடுதிகள்… தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம்… பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்கிறார்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பிலும், வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி சமூகநலத் துறையில் பல சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5.00 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கினார்.

மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3.00 லட்சம் வீதம் 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3.00 லட்சம் வீதம் ரூ.27 லட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் தொகை வழங்கினார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3,000/- வீதம் ரூ.23 கோடியே 149 லட்சம் வழங்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் “தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021″ வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.