மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான பணிகள் துவங்கிய நிலையில், பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்க உள்ளது.
இந்த சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளான கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதையும் படியுங்கள் : பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை டெல்லியில் நடத்த நடவடிக்கை – பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்
அதன்படி, ஆடி வீதியில் பந்தல் அமைத்தல், சித்திரை வீதிகளில் தடுப்புகள் அமைத்தல், ஆடி விதிகளில் வர்ணம் பூசுதல், தேர் அலங்கரித்தல், திருக்கல்யாண மண்டபத்தில் பந்தல் அமைத்து பூ அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கு 60 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடுவதாகவும், ஒப்பந்தப்புள்ளி எடுக்க விரும்பும் நிறுவனங்கள் கோயில் நிர்வாகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







