பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடத்த நடவடிக்கை – பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்

முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை டெல்லியில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் 6 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு…

முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை டெல்லியில் நடத்த நடவடிக்கை எடுப்பதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் 6 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மூக்கையாத்தேவரின் சொந்த ஊரான பாப்பாபட்டியில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி, மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், திமுக தேனி மாவட்டச் செயலாளர் என பல்வேறு கட்சித் தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : கைதி பற்களை பிடுங்கிய விவகாரம் : மேலும் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, ”பாப்பாபட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பி.கே.மூக்கையாத்தேவர் பெயர் வைக்கவும், பாப்பாபட்டியில் வெண்கல சிலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து உரிய தீர்வு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன், “பி.கே.மூக்கையாத்தேவரின் புகழ், இந்த பாப்பாபட்டியோடு முடிந்து விடாமல், ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் ஒத்துழைத்தால் டெல்லியில் நூற்றாண்டு விழா நடத்த நடவடிக்கைகள் எடுப்பேன். பி.கே.மூக்கையாத்தேவரின் தபால் தலை வெளியிட வைக்கப்பட்ட கோரிக்கையை பாரதப் பிரதமரிடம் எடுத்து கூறி தபால் தலை வெளியிடவும், உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தேசிய தலைவர் நேதாஜிக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.