மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!

கர்நாடக மாநிலத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம் என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது. இல்லையென்றால் தக் லைஃப் படம் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தது.

இந்த சர்ச்சை தொடர்பாக கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ என கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு ஒரு வாரம் கால அவாகசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கேட்டிருந்தது. இதனைக் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, நாங்கள் மன்னிப்புக் கோரவில்லை. கன்னட ஃபிலிம் சேம்பர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துக் கொள்வதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.