“ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஆர்.ஆர். கிரியேட்டிவ் கமர்சியல் – சந்திர மோகன் ரெட்டி தயாரிப்பில் இயக்குநர் சாலபதி புவ்வாலா…

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஆர். கிரியேட்டிவ் கமர்சியல் – சந்திர மோகன் ரெட்டி தயாரிப்பில் இயக்குநர் சாலபதி புவ்வாலா இயக்கத்தில் உருவான படம் ’என்னை மாற்றும் காதலே’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திகேயா, நடிகை கிருத்திகா சீனிவாசன், இசையமைப்பாளர் ரதன், நடிகை துளசி உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ”ராஜன் சார் எப்போது பேசினாலும் யூடியூபில் எவர் கிரீன் அவர் தான். தமிழ்நாட்டை நம்பி ஆந்திராவில் இருந்து வந்த தயாரிப்பாளரை நாம் எப்படி பார்த்து கொள்ள வேண்டும்?. சங்கராபரணம் படத்தில் சிறிய பொண்ணாக துளசியை பார்த்தது , இப்போது எல்லாரும் துளசியம்மா என்று சொல்கிறார்கள்.

பல நாட்களாக திரைத்துறையில் கிசு கிசு போய் கொண்டு இருக்கிறது. ரெட் ஜெயன்ட்
என்றாலே இடைஞ்சல் தான். எதை பார்த்தாலும் ரெட் ஜெயன்ட். அவர்களை விட்டால் வேறு
ஆள் கிடையாது. எல்லா படமும் ரெட் ஜெயன்ட் தான் வளைத்து போட்டிருக்கிறார்கள்.
உதயநிதியால் தான் எல்லாம் என்று தொடர்ந்து காதுபடவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் உண்மை.

அவர்களால் எவ்வளவு நன்மை இருக்கிறது. எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பது முக்கியம். படம் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் அவர்களிடம் கூட்டமாக நிற்கிறார்கள். இன்றைக்கு அவர்கள் ரிலீஸ் செய்த நிறைய படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. ரெட் ஜெயன்ட் என்பதால் தவறுகள் ஏதும் நடக்காமல் தயாரிப்பாளர்களுக்கு சரியாக பணம் வந்து சேர்கிறது. லவ் டுடே படத்தையும் அவர்கள் தான் வாங்கி இருக்கிறார்கள். தற்போது சினிமாவே நன்றாக இருக்கிறது. காந்தாரா படம் பார்த்தேன். அதுவும் அவ்வளவு பெரிய கலெக்ஷனை கொடுத்திருக்கிறது. திரையுலகில் வந்திருக்கும் இளைஞர்கள் எல்லாம் நன்றாகவே படம் எடுத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் கே.‌ ராஜன், “சினிமாவில் பணத்தை கொட்டிவிட்டால் எடுக்க முடியாது. தேவையான செலவுகளை செய்துதான் ஆக வேண்டும். பெரிய படங்கள் எடுத்து, நான் 3 கோடி ரூபாய் இழந்துள்ளேன். சிறிய படங்களில் பல லட்சத்தை இழந்திருக்கிறேன். நான் துணி வியாபாரம் செய்து 6 வருடம் சம்பாதித்ததில் வந்த பணத்தை வைத்து தான் சினிமாவிற்கு பைனான்ஸ் செய்திருக்கிறேன். யாரும் வட்டிக்கு கூட கொடுக்கவில்லை.

4 வருடமாக இன்னும் சில பேர் கோடிக் கணக்கான பணத்தை தராமல் இருக்கின்றனர். நான் ஏமாந்தது போதும். மற்ற யாரும் ஏமாறக் கூடாது. எனக்கு சில விரோதிகள் இருக்கிறார்கள். தேவையில்லாமல் தவறாக பேசுவார்கள். அவர்கள் எல்லாம் பயில்வான்கள், வியாபாரிகள். தமிழை கெடுத்தவர்கள் தெலுங்குக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்.

ரெட் ஜெயன்ட் படத்தை வாங்குவதாக சொல்கிறார்கள். அவர்கள் வாங்கவில்லை. இவர்கள்
தான் கொடுக்கிறார்கள். ரெட் ஜெயன்ட் இருப்பதால் கணக்கு ஒழுங்காக காட்டப்படுகிறது.
ஜி.எஸ்.டி ஒழுங்காக கட்டப்படுகிறது. அதில் இப்படிப்பட்ட பல நன்மைகள் இருக்கின்றன என்பதை 5 படங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.