இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி

அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், சில்லறை…

அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், சில்லறை வணிகத்தில் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், தகவல்களை பாதுகாப்பது, இணைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்றவற்றில், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் சவாலை ஏற்படுத்தி இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களின் திட்டங்கள், நிதி சார்ந்த விதிகளை வகுப்போருக்கு சவால் அளிப்பதாகவும், ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நமது நாட்டில் அமேசான், கூகுள் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன. ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சில்லறை வணிகத்திற்கான பண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான அனுமதியைப் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த கருத்தை தெரிவித்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.