கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்து

பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் அவர் மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்வதாகக் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர், ஆமிர்கான். இந்தி சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர்,…

பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் அவர் மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்வதாகக் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர், ஆமிர்கான். இந்தி சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர், ரங்கீலா, லகான், மங்கள் பாண்டே, ரங்தே பசந்தி, 3 இடியட்ஸ் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்போது ’லால் சிங் சத்தா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் இருக்கிறார்.

முன்னதாக, ஆமிர்கான், நடிகை ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் இரா என்ற மகளும் உள்ளனர். பின்னர் அவரை விவாகரத்து செய்த ஆமிர்கான், லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை காதலித்து 2005 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நடிகர் அமீர் கானும் கிரண் ராவும் இணைந்து தங்கள் விவாகரத்து தொடர்பாக அறிக்கை ஒன்றை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:
நாங்கள் பயணித்த இந்த 15 வருட அழகான வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மகிழ்ச்சி, சிரிப்பு ஆகியவற்றுடன் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். எங்கள் உறவு, நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பால் வளர்ந்தது. இப்போது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறோம். கணவன் மனைவியாக இல்லாமல், பெற்றோர் மற்றும் குடும்பமாக சேர்ந்து வாழ இருக்கிறோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராக இருக்கிறோம். அவரை நாங்கள் ஒன்றாகவே வளர்ப்போம்.

திரைப்படங்கள், பானி அறக்கட்டளை மற்றும் பிற திட்டங்களில் ஒற்றுமையாகத் தொடர்ந்து பணியாற்றுவோம். எங்களுக்கு ஆதரவளித்த நண்பர்கள், உறவினர்கள், குடும்பங்களின் புரிதலுக்கு நன்றி. எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்கள் ஒரு முடிவாக அல்லாமல், ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.