ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளத்தை வரவு வைக்கும் வகையில் விதிமுறைகளில் RBI மாற்றம் செய்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி நாட்கள், விழா கால மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வரவு வைக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. வங்கிகளின் வாயிலாக முக்கியமான பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்வதற்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறை நாட்களில் அனுமதி இல்லாமல் இருந்தது. இப்போது ஆர்டிஜிஎஸ் எனப்படும் இணையதள பரிமாற்றங்கள், ஐஎம்பிஎஸ் என்ற மொபைல் வழி பணப் பரிமாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கிரெடிட் செய்வது குறித்த பணப்பரிமாற்றங்களை வங்கி அலுவலக நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இதில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் எனப்படும் பணப்பரிமாற்ற முறையில் 24 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்த நடைமுறை அமலுக்கு வரும் போது வங்கிகளின் வாயிலாக சம்பளம் தரும் நிறுவனங்கள் இனி சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வங்கி விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் கூட வங்கிகளில் ஊழியர்களின் சம்பளத்தை வரவு வைக்க முடியும். அதே போல வங்கி கடன்களுக்கான EMI தொகையையும் இனிமேல் விடுமுறை நாட்களில் செலுத்துவதற்கும் இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பளம் தவிர பொதுத்துறை நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் பென்ஷன் தொகையையும் விடுமுறை தினங்களில் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.